முல்லன்பூரில் அமைந்துள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (11) நடந்த இரண்டாவது டி:20 போட்டியில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலமாக தென்னாப்பிரிக்கா ஐந்து போட்டிகள் கொண்ட டி:20 தொடரை 1-1 என சமன் செய்தது.
நேற்று மாலை ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்புக்கு 213 ஓட்டங்களை குவித்தது.
அதிகபட்சமாக டி கொக் 90 ஓட்டங்களை எடுத்தார்.
இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 214 ஓட்ட இலக்கை துரத்திய இந்திய அணி, 19.1 ஓவர்களில் 162 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது, தென்னாப்பிரிக்காவுக்கு தீர்க்கமான வெற்றியைப் பெற்றுத் தந்தது.
இந்தியாவின் சேஸிங் மிக மோசமான நிலையில் தொடங்கியது, பவர்பிளேயில் முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களும் சொப்ப ஓட்டங்களுக்கு ஓட்டம் இழந்தனர்.
தொடக்க வீரர் ஷுப்மான் கில் லுங்கி நிகிடி வீசிய முதல் ஓவரிலேயே கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.
இரண்டு சிக்ஸர்களுடன் ஆக்ரோஷமாகத் துடுப்பாட்டத்தை தொடங்கிய அபிஷேக் சர்மா (8 பந்துகளில் 17 ஓட்டம்), அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் (4 பந்துகளில் 5 ஓட்டம்) இருவரையும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் ஆட்டமிழக்கச் செய்தார்.
இதனால் இந்தியா 4 ஆவது ஓவரில் 32/3 என்ற நிலையில் தடுமாறியது.
இந்திய அணிக்கு திலக் வர்மா ஓரளவு ஸ்திரத்தன்மையை அளித்தார்.
முதலில் அக்சர் படேலுடன் இணைந்து, பின்னர் ஹார்டிக் பாண்ட்யாவுடன் இணைந்து ஒரு முக்கியமான இன்னிங்ஸை பெற்றுக் கொடுத்தார்.
இறுதியில் 34 பந்துகளில் 62 ஓட்டங்களுடன் லுங்கி நிகிடியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக இந்திய அணி 19.1 ஓவர்களில் 162 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஓட்னீல் பார்ட்மேன் அதிகபடியாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக குயின்டன் டிகொக் தெரிவானார்.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி டிசம்பர் 14 அன்று தர்மசாலாவில் ஆரம்பமாகும்.


















