தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல, சாலை விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் வாகனமும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
சபுகஸ்கந்த டெனிமல்லா பகுதியில் நேற்றையதினம் (11) இரவு 7.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, காரில் பயணித்த 25 வயதுடைய பெண், அவரது ஆறு மாத குழந்தை மற்றும் 55 வயதுடைய தாய் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், குழந்தை விசேட சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜீப்பில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்
விபத்துடன் தொடர்புடைய ஜீப், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சப்புகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வந்த நிலையில்,
சமூக ஊடகங்களில் சிலர் விபத்து நடந்த நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாக பல்வேறு கூற்றுக்களை வெளியிட்டனர், ஆனால் விசாரணைகளில் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்
















