டித்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட 23 நாட்களின் பின்னர் மலையக ரயில் பாதையின் பதுளை-அம்பேவெல இடையிலான ரயில் சேவைகள் இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் ஆரம்ப பயணத்தை குறிக்கும் வகையில், இன்று காலை 9.00 மணிக்கு ‘Class S14’ வலுச்சக்தி தொகுதியைக் கொண்ட பதுளை – அம்பேவெல விசேட ‘உடரட்ட மெனிகே’ ரயில் தனது பயணத்தை ஆரம்பித்தது.
அதே நேரத்தில் அம்பேவெலவிலிருந்து பதுளைக்கு திரும்பும் ரயில் சேவை காலை 9:30 மணிக்கு தொடங்கியது.
நாட்டின் மிக முக்கியமான ரயில் பாதைகளில் ஒன்றான சுற்றுலாவில் முக்கிய பங்கு வகிக்கும் குறித்த மார்க்கமூடான ரயில் போக்குவரத்து பழுதுபார்ப்புப் பணிகளைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்படுவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
மண்சரிவுகள் மற்றும் கனமழையால் குறித்த பிரிவு கடுமையான சேதத்திற்கு ஆளானதைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு, தன்னார்வலர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடன் இலங்கை ரயில்வே இந்த மறுசீரமைப்பை மேற்கொண்டது.















