டெல்லியில் இருந்து மும்பை நோக்கி இன்று (22) அதிகாலை பயணத்தைத் தொடங்கிய ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தலைநருக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தை எதிர்கொண்டது.
விமானத்தின் வலது பக்க எஞ்சினில் எண்ணெய் அழுத்தம் கடுமையாகக் குறைந்ததை ஊழியர்கள் கண்டறிந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைக்காக விமானத்தை உடனடியாக டெல்லி நோக்கி மீண்டும் திருப்பினர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
AI887 என்ற ஏர் இந்தியா விமானம், இன்று அதிகாலை 3.20 மணிக்கு இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
அப்போது, வலது பக்க எஞ்சினில் அசாதாரணமாக குறைந்த எண்ணெய் அழுத்தத்தை விமானிகள் கவனித்தனர்.
இது எஞ்சின் எண் 2 என அடையாளம் காணப்பட்டது.
எண்ணெய் அழுத்தம் பின்னர் பூஜ்ஜியமாகக் குறைந்ததுடன், இது நிலையான அவசர நடைமுறைகளைத் தூண்டியதுடன், அதனால் விமனத்தை மீண்டும் டெல்லி நோக்கி திருப்பும் முடிவினை விமானிகள் எடுத்தனர்.
டெல்லி விமான நிலையத்தில், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும் அனைத்து பணியாளர்களும் பயணிகளும் அதிலிருந்து பாதுகாப்பாக வெளியேறினர்.
இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
விமானப் போக்குவரத்து அடிப்படையில், இயந்திர எண்ணெய் அழுத்தம் பூஜ்ஜியமாகக் குறைவது ஒரு தீவிர பாதுகாப்புக் கவலையாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் இயந்திர கூறுகளை குளிர்ச்சியாகவும் சீராகவும் நகர்த்துவதற்கு எண்ணெய் அவசியம்.
எண்ணெய் அழுத்தம் கடுமையாக குறைவடைவதானது விரைவான வெப்பமடைதலுக்கு வழிவகுப்பதுடன், இயந்திர செயலிழப்பு அல்லது தீ விபத்துக்கு வழிவகுக்கும்.
















