இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மீது ஒற்றையாட்சி முறையைத் திணிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அது வழி வகுக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, தற்போதைய அரசாங்கம், ஈழத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சி அமைப்பை உறுதி செய்யவேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் சில தலைவர்கள், ஒற்றையாட்சி முறையை வலுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தங்களைத் திட்டமிட்டு வருவதாகவும் அது, சிங்கள பெரும்பான்மைவாதத்தை மேலும் ஊக்குவிக்கும் என அன்புமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இரண்டு தேசிய இனங்கள் வசிக்கும் நாட்டில் இதுபோன்ற நடவடிக்கைகள் ஆபத்தானவை மற்றும் கண்டிக்கத்தக்கவை என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நினைவு கூர்ந்துள்ள அன்புமணி, இந்த ஒப்பந்தம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதன் மூலம் தமிழர்களுக்கு சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சி அமைப்பைக் கருத்தில் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், இலங்கை இதைத் தொடர்ந்து செயல்படுத்த மறுத்து வருவதாகவும் 13வது அரசியலமைப்பு திருத்தம், தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் குறைத்து விட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இல்லாத நிலையிலும், தமிழர் விடுதலைப் போராட்டத்தின் மூல காரணங்கள் நீடிப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இலங்கையில் சுயாட்சியை நிரந்தரமாக மறுக்கும் எந்தவொரு அரசியலமைப்பு மாற்றமும் ஈழத் தமிழர்களிடையே அடக்கப்பட்ட விடுதலை உணர்வுகளை மீண்டும் தூண்டிவிட்டு இலங்கையின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
















