கொழும்பில் நாளைய (31) தினம் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2026 புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக வெளிப் பகுதிகளில் இருந்து அதிகளவானோர் கொழும்புக்கு குறிப்பாக காலி முகத்திடலுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால், எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கோட்டை, புறக்கோட்டை, கொம்பனி வீதி, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் உள்ளிட்ட மத்திய பகுதிகளில் குறிப்பிடத்தக்க போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் வழக்கமான போக்குவரத்து நடவடிக்கை பராமரிக்கப்படும் அதே வேளையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் மாற்று வழிகள் செயல்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மாற்று போக்குவரத்து திட்டத்தின் கீழ்:
காலி வீதி ஊடாக கொழும்பிலிருந்து வெளியேறுதல் – என்.எஸ்.ஏ சுற்றுவட்டம், காலி வீதி, பாலதக்ஷ மாவத்தை சந்தியில் இடதுபுறமாக (எம்.ஓ.டி சந்தி) திரும்பி, பாலதக்ஷ மாவத்தை, மாக்கன் மாக்கர் மாவத்தை, காலி முகத்திடல் சுற்றுவட்டம் ஊடாக கொள்ளுப்பிட்டி நோக்கிச் செல்ல முடியும்.
காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் பாலதக்ஷ மாவத்தை சந்தி வரை மற்றும் அதற்கு அப்பால் செல்ல முடியும்.
காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து மாக்கன் மாக்கர் மாவத்தை வழியாக பயணித்து பாலதக்ஷ மாவத்தை ஊடாக காலி வீதி நோக்கியோ பயணிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலதக்ஷ மாவத்தையின் கிளை வீதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வலதுபுறமாகத் திரும்பி கொழும்பிலிருந்து வெளியேற முடியும். காலி வீதியின் கிளை வீதிகளிலிருந்து நுழையும் அனைத்து வாகனங்களும் வலதுபுறமாகத் திரும்பி NSA சுற்றுவட்டம் நோக்கிச் செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்துத் திட்டத்தின் போது கொழும்பு நகரின் நடைபாதைகளிலோ அல்லது பிரதான வீதிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட மாட்டாது.
இவ்வாறான போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்தை நிர்வகிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சுமார் 1,200 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
நியமிக்கப்பட்ட வாகன தரிப்பு இடங்களில் சுமார் 5900 வாகனங்கள் நிறுத்த முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டிகைக் காலங்களில் நெரிசலைக் குறைக்க, பொதுமக்கள் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, நியமிக்கப்பட்ட வாகன தரிப்பு இடங்களை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.


















