டித்வா சூறாவளி தாக்கத்தின் சேதங்களை, ஈடுசெய்வதற்கு சுமார் 20 பில்லியன் ரூபா நிதி தேவைப்பட்டிருந்தாகவும் அதனை மீட்டெடுப்பதற்கு புதிய ஆண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது அவசியம் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான மின்சார கட்டணங்களை திருத்தக் கோரி இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 11.57 சதவீத கட்டண உயர்வு அவசியமென மின்சார சபை சமர்ப்பித்து;ளள அறிக்கையில் முன்மொழிந்துள்ளது.
இந்நிலையில் மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டண அதிகரிப்பை அங்கீகரிப்பதா இல்லையா என்பது தொடர்பாக உரிய நடைமுறைகள் மற்றும் விவாதங்களை மேற்கொண்ட பின்னர் தீர்மானம் ஒன்றை அறிவிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் பிரகாரம் 2026ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 13 ஆயிரத்து 94 மில்லியன் ரூபா நிதி பற்றாக்குறை மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் எனவே அதனை நிவர்த்தி செய்வதற்கு கட்டணத்தில் 11.57 சதவீதமான கட்டண அதிகரிப்பு அவசியம் என்றும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக டித்வா சூறாவளி காரணமாக மின் இணைப்புகளில் சுமார் 20 பில்லியன் ரூபா பெறுமதியான சேதங்கள் ஏற்பட்டிருந்தாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே வெளிப்புற நிதி ஆதரவு பெறப்படவேண்டும் என்றும் டித்வா சூறாவளியால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கான செலவினங்களை 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு கட்டண திருத்தத்தின் மூலமே மீட்டெடுக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் குறிப்பிட்டுள்ளது.
















