இந்திய இராணுவத் தளபதி இரு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி (Upendra Dwivedi) ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் இலங்கைக்கு நான்கு நாள் பயணமாக புறப்பட்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணம்
தனது இரு நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தில், ஜெனரல் திவேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்து, செல்வாக்கு மிக்க வளைகுடா நாட்டின் உயர் இராணுவ அதிகாரிகளுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.
ஐக்கிய அரபு எமிரேட் தேசிய பாதுகாப்பு கல்லூரி உள்ளிட்ட முக்கிய இராணுவ நிறுவனங்களையும் பார்வையிட்டு அதிகாரிகள் மற்றும் படையினருடன் இந்த விஜத்தில் கலந்துரையாடவுள்ளார்.
“இந்த ஈடுபாடுகள் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்முறை இராணுவ பரிமாற்றங்கள் மற்றும் இரு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மூலோபாய புரிதலை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன” என்று இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 5-6 ஆம் திகதியிலான ஜெனரல் திவேதியின் வளைகுடா நாட்டிற்கான பயணம், பரஸ்பர புரிதலை ஆழப்படுத்துவதற்கும் பொதுவான ஆர்வமுள்ள பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இலங்கை பயணம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து, ஜெனரல் திவேதி ஜனவரி 7 முதல் 8 வரை இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார்.
கொழும்பில், பாதுகாப்பு செயலாளர் மற்றும் இலங்கை இராணுவத் தளபதி உள்ளிட்ட மூத்த அரசியல் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்.
இதன்போது, பயிற்சி ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் குறித்து இந்த விவாதங்கள் நடைபெறும் என்றும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.


















