கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷ் அரசாங்கம், நாட்டில் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஒளிபரப்பை காலவரையின்றி நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அண்மைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த உத்தரவை பங்களாதேஷ் அரசாங்கம் திங்கள்கிழமை (05) பிற்பகல் நிறைவேற்றியது.
இதன் விளைவாக, நாட்டில் உள்ள ரசிகர்கள் இனி எந்த தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் அல்லது ஸ்ட்ரீமிங் தளத்திலும் IPL போட்டிகளை சட்டப்பூர்வமாகப் பார்க்க முடியாது.
கடந்த சில நாட்களாக, பங்களாதேஷில் இந்துக்கள் கொல்லப்படும் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.
இது இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உறவுகளை மோசமாக்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கடந்த சனிக்கிழமை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவிக்க உத்தரவிட்டது.
மினி ஏலத்தில் 9.20 கோடி இந்திய ரூபாய்க்கு ரஹ்மானை தேர்வு செய்த KKR, பின்னர் அந்த உத்தரவுகளுக்கு அமைவாக அவரை விடுவித்தது.
மூன்று முறை சாம்பியன்களான அணி இப்போது மாற்று வீரரை ஒப்பந்தம் செய்ய வேண்யை நிலையில் உள்ளது.
ரஹ்மான் தொடர்பான சர்ச்சையின் விளைவாக, தனது T20 உலகக் கிண்ணப் போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்றுமாறு கோரி பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்துக்கு (ICC) கடிதம் எழுதியுள்ளது.
பல தகவல்களின்படி, ஐ.சி.சி இப்போது ஒரு புதிய அட்டவணையை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் பங்களாதேஷ் டி20 உலகக் கிண்ணத்தில் தனது அனைத்து குரூப் சி போட்டிகளையும் இலங்கையில் விளையாடும்.
தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், நேபாளம் மற்றும் இத்தாலி ஆகியவற்றுடன் குரூப் சியில் இடம் பெற்றுள்ள பங்களாதேஷ், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மற்றும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தங்கள் போட்டிகளை விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணி இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இத்தாலி அணிகளை கொல்கத்தாவில் எதிர்கொள்ள உள்ளது.
அதே நேரத்தில் நேபாளத்திற்கு எதிரான அவர்களின் இறுதி குழு நிலை போட்டி மும்பையில் நடைபெற உள்ளது.
முன்னதாக, அபுதாபியில் நடந்த மினி ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுடன் கடுமையான ஏலப் போருக்குப் பிறகு ரஹ்மான் கொல்கத்தா அணிக்கு வாங்கப்பட்டார்.
30 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் இதற்கு முன்பு IPL போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



















