அனுராதபுரம், கலென்பிடுனுவெவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (06) ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது..
குடும்ப தகராறு காரணமாக நபரொருவர் தனது வீட்டிற்கு தீ வைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (6) அதிகாலை 2:00 மணியளவில் கலென்பிடுனுவெவ, நுவரகம் காலனியின் படிகாரமடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குடும்பத் தகராறில் 43 வயது நபர் ஒருவர் தனது சொந்த வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவநதுள்ளது.
இந்த நாசகார செயலினால் குறித்த நபரும் அவரது 13 வயது மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதேநரேம், பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேக நபரின் 36 வயது மனைவி சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயது மாமியார் ஆகியோர் தீக்காயங்களுடன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீப்பிடித்த நேரத்தில், வீட்டிற்குள் மனைவி, அவரது தாயார் மற்றும் இரண்டு மகள்கள் மட்டுமே இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த மகன், தனது தாயையும் சகோதரிகளையும் தீயில் இருந்து காப்பாற்ற முயன்றபோது பலத்த தீக்காயங்களுக்கு ஆளானார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், 43 வயதான சந்தேக நபர் வழக்கமாக மது அருந்துபவராகவும், தனது மனைவியை அடிக்கடி தாக்கியவராகவும் கண்டறியப்பட்டுள்ளார்.
இவர்களது குடும்ப தகராறுகள் தொடர்பாக கலென்பிடுனுவெவ பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இரு தரப்பினரும் பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவுகள் காட்டுகின்றன.
எவ்வாறெனினும் தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிடுனுவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
















