வெனிசியூலாவின் உப ஜனாதிபதி டெல்சி ரொட்ரிக்ஸ், புதிய இடைக்கால ஜனாதிபதியாக இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.
அமெரிக்க இராணுவத்தால் நாடு கடத்தப்பட்ட வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் உப ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை இடைகால ஜனாதிபதியாக நியமித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில், டெல்சி ரோட்ரிக்ஸ், வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியாக அந்நாட்டின் நாடாளுமன்றக் கட்டிடத்தில் பதவியேற்றார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலாவை நிலையான, நம்பிக்கையான ஆட்சியின் கையில் ஒப்படைக்கும் வரையில் அமெரிக்கா நிர்வாகம் செய்யும் எனவும், வெனிசுவேலா மசகு எண்ணெய் வளங்களை பாதுகாக்க இராணுவம் களத்தில் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களின் சொத்துக்களை சுவிட்சர்லாந்து அரசாங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கியுள்ளது.
மதுரோ அமெரிக்காவினால் கைதுசெய்யப்பட்டு நியூயோர்க் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ள நிலையிலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், மதுரோ மற்றும் அவரது நெருங்கிய நபர்களின் சொத்துக்களை நாட்டிற்கு வெளியே கடத்துவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
இந்தச் சொத்து முடக்கம் இன்று முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் என சுவிட்சர்லாந்து மத்திய பேரவை அறிவித்துள்ளது.
இந்தச் சொத்துக்கள் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டவை என்பது எதிர்கால சட்ட நடவடிக்கைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டால், அந்தப் பணத்தை மீண்டும் வெனிசுவேலா மக்களிடமே ஒப்படைக்க சுவிட்சர்லாந்து முயற்சிக்கும் என அந்தநாட்டு அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இந்தச் சொத்து முடக்கம் தற்போதைய இடைக்கால அரசாங்கத்தின் உறுப்பினர்களைப் பாதிக்காது என்றும், இது மதுரோ மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் சுவிட்சர்லாந்து தெளிவுபடுத்தியுள்ளது.
ஆளும் பெடரல் கவுன்சில் இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது.
வெனிசுலாவின் நிலைமை நிலையற்றது என்றும், வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் பல்வேறு விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பெடரல் கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.


















