அமெரிக்கப் படைகளால் தீவிரமாகத் துரத்தப்படும் ‘மரினேரா’ எனப்படும் எண்ணெய் கப்பலுக்குப் பாதுகாப்பாக ரஷ்யா தனது நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பிற கடற்படை கப்பல்களை அனுப்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
ஆரம்பத்தில் ‘Bella 1’ என்று அழைக்கப்பட்ட இக்கப்பல், வெனிசுலா மீது அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி எண்ணெய் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த மாதம் கரீபியன் கடலில் அமெரிக்க கடலோரக் காவல்படை இதனை மறிக்க முயன்றபோது, கப்பல் பணியாளர்கள் அதில் ஏற அனுமதி மறுத்து அட்லாண்டிக் கடலை நோக்கித் தப்பினர்.
தப்பியோடும் வழியில் கப்பல் பணியாளர்கள் அதன் மேல்பகுதியில் ரஷ்யக் கொடியைப் பெயிண்ட் செய்ததுடன், கப்பலின் பெயரை ‘மரினேரா’ என மாற்றினர்.
தற்போது இது உத்தியோகபூர்வமாக ரஷ்யாவின் சோச்சி துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கப்பல் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் ஐஸ்லாந்துக்கு இடையிலான வடக்கு அட்லாண்டிக் பகுதியில் கடும் குளிரிலும் மோசமான வானிலையிலும் பயணித்து வருகிறது.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடந்த சனிக்கிழமை அமெரிக்க விசேட படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகம் தனது கடல்சார் முற்றுகையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா இக்கப்பலை மூழ்கடிப்பதை விட, அதைக் கைப்பற்றவே விரும்புகிறது.
இதற்காக பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு சுமார் 10 போக்குவரத்து விமானங்கள் மற்றும் சிறப்பு உலங்கு வானூர்திகள் வந்து சேர்ந்துள்ளன. கப்பலின் பெயர் மாறினாலும், அதன் தனித்துவமான அடையாள எண் மாறாததால், சர்வதேச சட்டப்படி அதைக் கைப்பற்ற தமக்கு அதிகாரம் இருப்பதாக அமெரிக்கா வாதிடுகிறது.
சர்வதேச கடற்பரப்பில் ரஷ்யக் கொடியுடன் பயணிக்கும் கப்பலுக்கு அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் தேவையற்ற நெருக்கடியைக் கொடுப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு சாடியுள்ளது
“கடல் வழிப் பயணச் சுதந்திரம்” பற்றிப் பேசும் நாடுகள், அதனைத் தாமும் கடைப்பிடிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம், யுக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்து வரும் ராஜதந்திர முயற்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஒருபுறம் சமாதானப் பேச்சுக்கள் நடக்கையில், மறுபுறம் நடுக்கடலில் இரு நாட்டுப் படைகளும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளது.





















