எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான எக்ஸ் (X) தளத்தில் உள்ள கிராக் (Grok) எனும் செயற்கை நுண்ணறிவு கருவி, சிறுவர்களின் தவறான படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுவது குறித்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இத்தகைய சட்டவிரோதமான செயல்களை எவ்வகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனம் உடனடியாக இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஊடகக் கண்காணிப்பு அமைப்பான ஆஃப்காம் (Ofcom) உரிய நடவடிக்கை எடுக்கத் தேவையான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராக் கருவி மூலம் உருவாக்கப்பட்ட இத்தகைய அருவருப்பான உள்ளடக்கங்களை நீக்கத் தவறினால், கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என அரசு எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், பாதுகாப்பு கருதி அரசு அதிகாரிகள் எக்ஸ் தளத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
இத்தளம் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கத் தவறினால், அதன் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
















