‘டித்வா’ புயல் காரணமாக சேதமடைந்த பாதுகாப்பு மின்சார வேலிகளைப் புனரமைக்கும் பணிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திய தலைமையில் நேற்று (10) நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் புயல் நிலைமை காரணமாகப் பெருமளவான மின்சார வேலிகள் சேதமடைந்ததுடன், குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல வனஜீவராசிகள் வலயத்தில் பாதுகாப்பு வேலிகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மேலும் பொலன்னறுவை மாவட்டத்தின் ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பாதுகாப்பு மின்சார வேலிகள் சேதமடைந்துள்ளன.
பாதுகாப்பு மின்சார வேலி பராமரிப்புப் பணிகளை ஒரு ‘சிரமதானப் பணியாக’ அல்லது கூட்டுப் பொறிமுறையொன்றின் ஊடாக முன்னெடுப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய, இந்தக் கூட்டு நடவடிக்கையை ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்யுமாறு சுற்றாடல் அமைச்சரினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுற்றாடல் அமைச்சின் ஆலோசனைக்கு அமைய, வனஜீவராசிகள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ், யானை வேலி பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பிரதேச செயலகங்கள், கிராமியக் குழுக்கள் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து இப்பணிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன.
இதற்கமைய, பாதுகாப்பு மின்சார வேலி பராமரிப்புப் பணிகளை இவ்வாரத்திற்குள் துரிதமாக மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
















