ஆப்பிரிக்காவில் நான்கு நாடுகளுக்கான உத்தியோப்பூர்வ விஜயத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் நிலையில் ஒரு குறுகிய பயணமாக சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi) இன்று (12) இலங்கை வருகிறார்.
அவர் இலங்கையில் இருந்து புறப்படுவதற்கு முன்பு நாளை (12) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஒரு சந்திப்பையும் மேற்கொள்ளவுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத்தின் மேம்பாடுகள் உட்பட இலங்கையில் நடைபெற்று வரும் சீன ஆதரவு திட்டங்களை விரைவுபடுத்துவது மற்றும் புதிய சீன முதலீடுகளுக்கான வழிகளை ஆராய்வது குறித்த விவாதங்கள் இங்கு மையமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதிலும், கொழும்புக்கு மேலதிக விமான இணைப்பை எளிதாக்குவதிலும் இலங்கை தரப்பு சீனாவின் ஆதரவைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதராக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து, நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஒரு மாதத்திற்குள் இந்தப் பயணம் அமையவுள்ளது.
இது பிராந்திய இராஜதந்திர ஈடுபாட்டை அதிகரிப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
எத்தியோப்பியா, சோமாலியா, தான்சானியா மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து வாங் யி கொழும்புக்கு வருகை தருகிறார்.
மூலோபாய பங்காளிகளுடன் பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான பெய்ஜிங்கின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சுற்றுப் பயணம் அமைவதாக சீன அதிகாரிகள் விவரித்துள்ளனர்.














