இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை சந்தித்து, அரசியல், பொருளாதார மற்றும் அபிவிருத்தி சார்ந்த முக்கிய கலந்துரையாடல்களை நடத்தினார்.
இலங்கை – அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பு உறவுகள், ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவான கூட்டுறவுகள் மற்றும் வடக்கின் நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இந்த சந்திப்பின் போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவரின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசு வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். பேரிடர் காலங்களில் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி மக்களுக்காக துணைநிற்பதே உண்மையான சர்வதேச நட்பின் அடையாளம் என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தற்போது நாட்டை மீண்டெழ வைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் பற்றியும் விவரித்தார்.















