2026 ஜனவரி 13 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, 2026 ஜனவரி 21 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளைப் பின்வருமாறு முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது:
2026 ஆம் ஆண்டில் தரம் 1 இற்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைவான பாடத்திட்டத்தின் முறைசார் கற்கை நடவடிக்கைகள், ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு இணங்க 2026 ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
தரம் 6 இற்காக அறிமுகப்படுத்தப்படவிருந்த புதிய பாடத்திட்ட அமுலாக்கமானது 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படுகின்றது.
2026 ஆம் ஆண்டில் தரம் 6 முதல் தரம் 13 வரையிலான வகுப்புகளுக்கு, நாளாந்தப் பாடவேளைகளின் எண்ணிக்கை எட்டாக (08) மட்டுப்படுத்தப்படல் வேண்டும் என்பதுடன், ஒரு பாடவேளைக்கான கால அளவு 40 நிமிடங்களாக நிர்ணயிக்கப்படல் வேண்டும். இதற்கமைய, கடந்த வருடங்களில் பின்பற்றப்பட்ட முறைமைக்கு அமைவாகவே கால அட்டவணைகள் தயாரிக்கப்பட வேண்டும்.
தரம் 6 இற்காக கடந்த வருடங்களில் நடைமுறையில் இருந்த பாடத்திட்டமே 2026 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.
தரம் 6 கல்வி நடவடிக்கைகளுக்கு, கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் பயன்படுத்திய பாடநூல்களையே பிரதானமாகப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
கடந்த வருடம் பயன்படுத்தப்பட்ட பாடநூல்களை மாணவர்களிடமிருந்து மீளப்பெற்று, அவற்றை மீண்டும் தரம் 6 மாணவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்படும்.
அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் புதிய பாடநூல்களை விரைவாக அச்சிட்டு விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
2026 ஆம் ஆண்டில் தரம் 6 இற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய பாடநூல்களுக்குரிய மென் பிரதிகள், கல்வி அமைச்சின் ‘e-thaksalawa’ (e-தக்சலாவ) இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
புதிய சீர்திருத்தங்களுக்குரிய மொடியூல் (Modules) தொடர்பான முன்னோடித் திட்டமொன்றை, இவ்வருடத்தில் தெரிவு செய்யப்பட்ட சில மாகாணங்களில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தரம் 6 இற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள மொடியூல் (Modules) மீண்டும் மீளாய்வு செய்து, எதிர்வரும் ஆண்டில் பொருத்தமான வகையில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைவான ஆசிரியர் குழாமைத் தயார்ப்படுத்தும் பயிற்சி நடவடிக்கைகள் 2026 ஆம் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மனிதவள மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, நிர்வாகச் சீர்திருத்தங்கள், மதிப்பீட்டுச் செயல்முறை மேம்பாடு மற்றும் பரந்தளவிலான பொது மக்கள் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் ஆகியன 2026 ஆம் ஆண்டிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள எண்ணக்கருப் பத்திரம் (Concept Paper), கலைத்திட்ட சட்டகம் (Curriculum Framework) மற்றும் அனைத்துத் தொகுதிகளும் (Modules), திறந்த மற்றும் விரிவானதொரு பொதுக் கலந்துரையாடலுக்காக பொதுமக்களுக்கு வெளியிடப்படும்.













