நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.சிவசுப்ரமணியம் அவர்களின் தலைமையில், நிந்தவூர் 3 பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட அரச ஸ்தாபனங்கள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நோய் தடுப்பு பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, டெங்கு கொசு பெருகக் கூடிய இடங்கள் உள்ளனவா என ஆராயப்பட்டதுடன், அவற்றை அகற்றுவது தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு வேலைத்தளங்களில் சுகாதார நிலைமைகள் ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடுகள் காணப்பட்ட இடங்களில் உடனடி சீரமைப்பு மேற்கொள்ளுமாறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அதேவேளை, வீதியோர கடைகள் மற்றும் உணவகங்களில் உணவு சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறை, சுற்றுப்புற சுத்தம் மற்றும் உணவு கையாளும் நடைமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. சுகாதார விதிமுறைகளை மீறிய இடங்களுக்கு தேவையான எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டன.
பொது மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில், இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், டெங்கு நோய் பரவலைத் தடுப்பதற்கும், உணவு சுகாதாரத்தை பேணுவதற்கும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.















