அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ஈரான் தன் வான்வெளியை மூடியுள்ளது.
இதன் காரணமாக பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தங்கள் விமான சேவைகளை மாற்றுப் பாதைகளில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரானின் அடக்குமுறை மத ஆட்சி அமைப்புக்கு எதிராக, கடந்த இரண்டு வாரங்களாக நாடு முழுதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
பொருளாதார சீரழிவு, பணவீக்கம் ஆகியவை இந்த போராட்டத்தின் துவக்கமாக இருந்தன.
தற்போது இது, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையாக மாறி உள்ளது.
இணையதள சேவையை அரசு முழுமையாக துண்டித்து, போராட்டக்காரர்களை கொடூரமாக அடக்கி வருகிறது.
ஈரான் அரசின் இந்த செயலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்ததுடன், ஈரானுடன் நல்லுறவு வைத்துள்ள நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீதம் வரியும் விதித்தார்.
இது தவிர, ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே, ஈரான் அரசு தன் வான்வெளியை மூட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன் காரணமாக, இந்தியாவில் இருந்து இயக்கப்படும் ‘ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட்’ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் சர்வதேச விமானச் சேவைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.
இது தொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஈரான் வான்வெளியைத் தவிர்த்து, மாற்றுப் பாதைகளில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மாற்றுப் பாதை வசதி இல்லாத இடங்களில் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன’ என குறிப்பிட்டுள்ளது.
இதேபோல், இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஈரான் வான் பரப்பைத் தவிர்த்து, நீண்ட துார மாற்றுப் பாதைகளில் விமானங்கள் இயக்கப்படுவதால் பயண நேரம் கணிசமாக அதிகரிக்கும். இதனால், விமானங்கள் தாமதமாக இலக்கை சென்றடைய வாய்ப்புள்ளன’ என குறிப்பிட்டுள்ளது.
எனவே, பயணியர் விமான நிலையத்திற்கு புறப்படும் முன், தாங்கள் செல்லும் விமானத்தின் தற்போதைய நிலையை இணையதளம் வாயிலாக சரிபார்த்துக் கொள்ளும்படி இரு நிறுவனங்களும் அறிவுறுத்தியுள்ளன.














