இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான பரீட்சைகளில் இடம்பெறும் மோசடி நடவடிக்கையானது கடந்த ஆண்டு 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 2025 செப்டம்பர் இறுதி வரையிலான ஆண்டில் சுமார் 2,844 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சாரதி மற்றும் வாகன தரநிலைகள் முகமைத்துவ நிலையத்தின் (DVSA) புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
இந்த எண்ணிக்கை முந்தைய 12 மாதங்களில் 1,940 ஆகவும், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் 1,274 ஆகவும் பதிவாகியிருந்தது.
மோசடிகளில் பரீட்சையின் போது மறைக்கப்பட்ட தொலைபேசியுடன் இணைக்கப்பட்ட வயர்லெஸ் இயர்போன்களை பரீட்சார்த்திகள் பயன்படுத்துவது மற்றும் ஆள்மாறாட்டம் செய்து பிற நபர்களை பணியமர்த்துவது என்பன அதிகளவில் அடங்கும்.
இந்த நடவடிககைகளானது வீதி பாதுகாப்பு கவலைகளைத் தூண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் சாரதி அனுமதிப்பத்திர பரீட்சைகளில் ஆள்மாறாட்டம் செயது பிற நபர்களை பரீட்சையில் அமர்த்தியதற்காக 96 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டதாகவும் சாரதி மற்றும் வாகன தரநிலைகள் முகமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

















