ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் தொடக்க ஆட்டத்தில் புதன்கிழமை (21) இந்தியா நியூசிலாந்தை 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
போட்டியில் அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ஓட்டங்களை எடுத்தார்.
உலகின் நம்பர் 1 டி:20 துடுப்பாட்ட வீரரான அபிஷேக் சர்மா எட்டு சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகள் விளாச, இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களை எடுத்தது.
இது இந்திய அணியின் நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது அதிகபட்ச டி:20 ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
அதேநேரம், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக, நாக்பூர்
மைதானத்தில் இந்தியா டி:20 போட்டிகளில் இரண்டாவது முறையாக 200க்கும் மேற்பட்ட ஓட்ட இலக்கினை எட்டிய சந்தர்ப்பமாகும் இது.
அபிஷேக் சர்மாவைத் தவிர, இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 32 ஓட்டங்களை எடுத்தார், ரிங்கு சிங் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களை எடுத்தார்.
பின்னர் வலுவான ஓட்ட இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களை மாத்திரம் எடுக்க முடிந்தது.
நியூஸிலாந்து அணி சார்பில் அதிகபடியாக க்ளென் பிலிப்ஸ் 40 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்களை எடுத்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக அபிஷேக் சர்மா தெரிவானார்.
இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட டி:20 தொடரில் இந்திய அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
வெள்ளிக்கிழமை ராய்ப்பூரில் இரண்டாவது டி20 போட்டி நடைபெறும்.
பெப்ரவரி 7 ஆம் திகதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கும் டி20 உலகக் கிண்ணத்துக்கான ஆயத்தமாக இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
















