கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் இன்று (23) ஆரம்பிக்கப்பட்டன.
இந்தச் செயற்பாடுகளின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், உலகின் 3 பிரதான கப்பல் நிறுவனங்களைச் சேர்ந்த 3 கப்பல்கள் கப்பல் தளத்திற்கு வருகை தந்தன.
12 கென்ட்ரி கிரேன்கள் மற்றும் 40 தானியங்கி முற்ற கிரேன்களைக் கொண்ட இந்தக் கப்பல் தளத்தின் ஊடாக, ஒரு பிராந்திய கப்பல் போக்குவரத்து மையமாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் மேலும் வலுவடையும்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் முதன்முறையாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
75 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் கிழக்கு முனையத்தின் மொத்த நீளம் 1320 மீற்றர்களாகும்.
அதில் 1090 மீற்றர் பகுதியும் ஏனைய நிர்மாணப் பணிகளில் 82% ஆனவையும் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டில் கிழக்கு முனையத்தின் ஊடாக ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கொள்கலன்கள் கையாளப்பட்டுள்ளதுடன், முழுமையான நிர்மாணப் பணிகள் முடிவடைந்த பின்னர் 1.5 மில்லியன் கொள்கலன்களைக் கையாள முடியும்.
கொழும்பு துறைமுகத்தின் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கும் நோக்கில் துறைமுக அதிகார சபையின் கண்காணிப்பு மற்றும் முதலீட்டின் கீழ் இந்த கிழக்கு முனையம் நிர்மாணிக்கப்படுகிறது.
கிழக்கு முனையம் மற்றும் அதானி நிறுவனம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய நிலைமையின் அடிப்படையில் உருவான எதிர்ப்புகளுக்குப் பின்னரே இது இடம்பெறுகின்றமை ஒரு விசேட அம்சமாகும்.












