டிக்டோக் மூலம் தான் சந்தித்த நபர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து அவர்களின் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் 28 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சந்தேக நபர் டிக்டோக் மூலம் ஒரு தனியார் வங்கி ஊழியருடன் நட்பு கொண்டு, ஜனவரி 19 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள ஒரு பெரிய ஷாப்பிங் வளாகத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்.
சந்திப்பின் போது சந்தேக நபர்,
பாதிக்கப்பட்டவருக்கு இரகசியமாக மயக்க மருந்து மாத்திரைகளை வழங்கியதாகவும், பின்னர் அவர் சுயநினைவை இழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள ஒரு ஹொட்டலுக்கு அழைத்துச் சென்று அவரது தங்க நகைகளைத் திருடி, பாதிக்கப்பட்டவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி ரூ.258,000 பணத்தை எடுத்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணை நடத்தி பன்னிபிட்டிய பகுதியில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபரிடமிருந்து ஒரு வங்கி அட்டை, ஐந்து மயக்க மாத்திரைகள் மற்றும் பல ரூபாய் நாணயத்தாள்களை அதிகாரிகள் மீட்டனர்.
மேலும் விசாரணையில், சந்தேக நபர் இதேபோன்ற முறையைப் பயன்படுத்தி ஒரு தனியார் நிறுவனத்தின் மற்றொரு ஊழியரை போதைப்பொருள் வழங்கி கொள்ளையடித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
















