ஈலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான எக்ஸ் தளத்தின் மென்பொருளான ”Grok’,’ பெண்களினதும் சிறுவர்களினதும் புகைப்படங்களை தவறாக மாற்றியமைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுவீடன் நாட்டின் துணைப் பிரதமர் எப்பா புஷ் (Ebba Busch) தானும் இவ்வாறான பாதிப்புக்கு உள்ளானதாகத் தெரிவித்துள்ளார்.
‘Grok மென்பொருள் மூலம் கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 30 இலட்சம் பாலியல் ரீதியான புகைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஆயிரக்கணக்கானவை சிறுவர்களுடையவை என்றும் கூறப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் கீழ் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
‘Grok தொழில்நுட்பத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை ”X’ நிறுவனம் சரியாகக் கையாண்டதா என்பது குறித்து ஐரோப்பிய ஆணையம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.தொடர்ந்தும் இவ்வாறான தவறுகள் நடந்தால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் அந்தத் தளத்தையே தடை செய்யும் அதிகாரம் ஒன்றியத்திற்கு உண்டு.
எனினும் தற்போதைக்கு அபராதம் விதிக்கவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகப் பிரச்சினைகள் காரணமாக இந்த விசாரணைகள் ஆரம்பத்தில் சற்றுத் தாமதமானதாகக் கூறப்படுகிறது.
எனினும் தனது பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனிநபர் உரிமைகளை மீறும் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக எடுக்கப்படும் இந்த நடவடிக்கை உலகளாவிய ரீதியில் ஒரு முக்கிய முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















