இந்தோனேஷியாவின் பாலி (Bali) நகரில் நேற்று ஆரம்பமான கரையோர நாடுகளின் கூட்டணியின் 30வது அமர்வில் (30th Session of the Coastal States Alliance – CSA 030) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித கமல் ஜினதாச அவர்களும் விஜயம் செய்துள்ளனர்.
இந்து சமுத்திர வலயத்தைச் சேர்ந்த 12 கரையோர நாடுகளின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் 2026 ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.
இந்து சமுத்திர டூனா ஆணைக்குழுவின் (IOTC) கட்டமைப்பிற்குள், இடம்பெயரும் மீன் இனமான டூனா (சூரை) மீன் வளத்திற்காக நியாயமான, நிலைபேறான (Sustainable) மற்றும் விதிகள் சார்ந்த முகாமைத்துவத்தை ஊக்குவிப்பதே இச்சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.
இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், மலேசியா, மாலைத்தீவு, மடகஸ்கார், மொசாம்பிக், பாகிஸ்தான், சோமாலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இக்கூட்டணியின் அங்கத்துவ நாடுகளாகச் செயற்படுகின்றன.
இம்மாநாட்டின் பயனாக கரையோர நாடுகளின் கூட்டணியை (CSA) ஸ்தாபிப்பது தொடர்பான கூட்டுப் பிரகடனமொன்று வெளியிடப்படவுள்ளதுடன், 2026 ஜூன் மாதம் பாலி நகரிலேயே நடைபெறவுள்ள “Ocean Impact Summit 2026” உச்சிமாநாட்டில் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நிலைபேறான கடற்றொழில் கைத்தொழிலைப் பேணுவதற்கு சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதன்போது வலியுறுத்தினார்
















