விவசாயத் துறைக்கு தொழில்நுட்ப ரீதியாக ஊக்கமளிக்கும் வகையிலும் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் பாரத் விஸ்தார் திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
நாட்டின் விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்க பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயத் துறையை மேம்படுத்தவும் தொழில்நுட்ப ரீதியாக ஊக்கமளிக்கும் வகையிலும் பாரத் விஸ்தார் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ’பாரத்- விஸ்தார்’ என்ற பெயரில் விவசாய வளங்கள் தொடர்பான ஒருங்கிணைந்த (ஏஐ) பன்மொழி தளம் ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும்.
இந்த தளம் விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்தி, விவசாயிகளுக்குத் தனித்துவமான ஆலோசனைகளை வழங்கும். இதன் மூலம் விவசாயிகள் குறித்த நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்க முடியும். விவசாயிகள் தங்கள் உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ளலாம். தவறான முடிவுகளால் ஏற்படும் அபாயங்களை குறைக்க விவசாயிகளுக்கு சரியான ஆலோசனைகளை இந்த தளம் வழங்கும்.
இதேவேளை, விவசாயத்துறையில் தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்கும் அரசின் தொலைநோக்குத் திட்டத்தின்படி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் இதன் மூலம் விவசாயத் துறை வளர்ச்சி அடையும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.




















