சாக்கோஸ் விவகாரம் தொடர்பில் கடந்த மாதம் கடுமையாக விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது இது கீர் ஸ்டார்மர் செய்துகொண்ட “மிகச்சிறந்த ஒப்பந்தம்” என்று கூறி, தனது ஆதரவை சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது ஒரு முழுமையான ஆதரவு என்று சொல்ல முடியாது என்றாலும், நிலைமை இதைவிட மோசமாக இருந்திருக்கக்கூடும் எனவும் ஒப்பந்தம்குறித்து தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, இந்த வாரம் கீர் ஸ்டார்மர் சந்தித்த சவால்களுக்குப் பின்னர் , சர்ச்சைக்குரிய சாக்கோஸ் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் அளித்துள்ள இந்த ஆதரவு பிரதமருக்கு ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, இந்த ஒப்பந்தத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் எதிர்காலத்தில் ஏதேனும் தவறு நடந்தால், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை அனுப்பி அந்தத் தீவுகளைக் கைப்பற்றத் தயங்காது என்றும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் மேண்டல்சன்-எப்ஸ்டீன் ஊழலை ஸ்டார்மர் கையாண்ட விதம் குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து வரும் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில், இது பிரதமருக்கு கிடைத்துள்ள ஒரு சிறிய நிம்மதி என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ட்ரம்ப் தனது ‘ட்ரூத் ‘சமூக ஊடக தளத்தில் (Truth Social) , ஸ்டார்மர் செய்துள்ள இந்த சாக்கோஸ் ஒப்பந்தம் “பலரின் கருத்துப்படி, அவர் செய்யக்கூடிய மிகச்சிறந்த ஒப்பந்தம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு இதே ஒப்பந்தத்தை “மிகப்பெரிய முட்டாள்தனம்” மற்றும் “முழுமையான பலவீனம்” என்று விமர்சித்த டொனால்ட் ட்ரம்ப்பிடமிருந்து வந்துள்ள இந்த மாற்றம் குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின்படி, சாக்கோஸ் தீவுகளின் இறையாண்மை மொரிஷியஸிடம் ஒப்படைக்கப்படும். அதே வேளையில், மிகப்பெரிய தீவான டியாகோ கார்சியாவில் உள்ள இங்கிலாந்து-அமெரிக்க ராணுவத் தளம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்படும்.
இந்நிலையில் நேற்றையதினம் ஸ்டார்மர் மற்றும் ட்ரம்ப் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இதில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

















