உக்ரைனுக்கு ஆதரவு வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் (EU) முன்னெடுத்துள்ள பாரிய கடன் திட்டத்தில் பிரித்தானியா இணைவது, இருதரப்பு உறவுகளையும் பாதுகாப்பையும் பலப்படுத்தும் என பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
ஆர்மீனியாவில் திங்கட்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் (EPC) கலந்துகொண்ட போதே பிரதமர் ஸ்டார்மர் இதனை தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் இது குறித்து விரிவாக ஆலோசித்தார்.
இந்தக் கடன் திட்டத்தில் இணைவதன் மூலம் உக்ரைனின் பாதுகாப்பு பலப்படுவதோடு, பிரித்தானியாவில் பாதுகாப்புத் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஐரோப்பாவுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதன் மூலம், பிரித்தானியாவின் பாதுகாப்பை மேம்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவைச் சீரமைப்பதன் மூலம் உக்ரைன் போரில் பிரித்தானியாவின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதோடு, சர்வதேச அளவில் தனது மூலோபாய நிலையை வலுப்படுத்தவும் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













