உலகமெங்கும் ரொக்கட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களின் ஏவுதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விண்வெளிக் குப்பைகளால் பூமிக்கு ஏற்படும் அபாயம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
விண்வெளியில் சுற்றிவரும் செயலிழந்த செயற்கைக்கோள்கள், ரொக்கட் பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் காரணமாக, வாரத்திற்குச் சராசரியாக சுமார் ஒரு மெட்ரிக் டன் எடையுள்ள விண்வெளிக் குப்பைகள் பூமியை நோக்கி விழுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கென்யா, அமெரிக்கா, போலந்து போன்ற நாடுகளில் ரொக்கட் பாகங்கள் மற்றும் செயற்கைக்கோள் கழிவுகள் விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், சில இடங்களில் நிலம் மற்றும் சொத்துக்களுக்குப் கணிசமான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
இதே நிலை நீடித்தால், வரும் 2035-ஆம் ஆண்டிற்குள் மனிதர்கள் வாழும் அடர்ந்த பகுதிகளில் விண்வெளிக் குப்பைகள் விழுவது அதிகரித்து, மனித உயிரிழப்புகள் ஏற்படும் சாத்தியக்கூறுகளும் உருவாகலாம் என வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆபத்தைத் தவிர்க்க, விண்வெளிக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றும் தொழில்நுட்பங்களை உடனடியாக மேம்படுத்துவதுடன், எதிர்கால விண்வெளித் திட்டங்களில் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
















