இங்கிலாந்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியைக் கொலை செய்த வழக்கில் ஒரு நபர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி லிங்கன்ஷையரின் பாஸ்டன் (Boston) பகுதியில் உள்ள தனது தாயார் வேலை செய்த கடைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த லிலியா வலுடைட் (Lilia Valutyte) என்ற சிறுமியை, டேவிடாஸ் ஸ்கேபாஸ் (Deividas Skebas) என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
26 வயதான ஸ்கேபாஸ், லிலியாவைக் கொன்றதை ஒப்புக்கொண்டதுடன் ,அது திட்டமிட்ட கொலை (Murder) என்பதை மறுத்து வந்துள்ளார்.
இதேவேளை, தனது மனநிலை பாதிப்பே இதற்குக் காரணம் என்று அவர் வாதிட்டார்.
இருப்பினும், லிங்கன் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் முடிவில், நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்து.
இதேவேளை, பாஸ்டன் பகுதியைச் சேர்ந்த ஸ்கேபாஸ் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவிக்கப்படுகின்றனர்.
சம்பவத்தன்று லிலியா தனது தாயாரின் கடைக்கு வெளியே ஒரு நண்பருடன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் மாலை 6:20 மணியளவில் அங்கு வந்த ஸ்கேபாஸ், திடீரென லிலியாவின் நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார்.
தனது மகள் அலறும் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் லினா சவிக்கேயின் (Lina Savicke) கைகளிலேயே லிலியா சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
கொலை நடந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஸ்கேபாஸ் கைது செய்யப்பட்டார்.
அவர் பயன்படுத்திய கத்தி அவரது வீட்டில் ரேடியேட்டருக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் அவர் விசாரணைக்குத் தகுதியற்ற மனநிலையில் இருப்பதாகக் கருதப்பட்டு, பாதுகாப்பு மிகுந்த ராம்ப்டன் (Rampton) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் அவரது மனநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீதான கொலை வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது.
ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனைகளுக்குப் பின்னர் , 11-க்கு 1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்தது.













