சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. 108 வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயில் மூலவர் கோபுரம் 108 அடி உயரத்தில் அஷ்டாங்க விமானமாக உள்ளது.
இது ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் மந்திரத்தை உணர்த்தும் வகையில் 3 தளங்களாக உள்ளன.
இதில் உச்சியில் உள்ள தளமான முதல் நிலைக்கு தங்கத் தகடு வேயும் திருப்பணி நடைபெற்றது.
மொத்தம் 32 கிலோ அளவிலான தங்கத் தகடு வேயப்பட்டது. திருப்பணி முடிந்த நிலையில் நேற்று , கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த 1-ம் திகதி முதல் பல்வேறு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றன. நேற்று காலை 8 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.55 மணிக்கு மூலவர் தங்க விமான கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதேவேளை அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன், சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார், மேலாளர் இளங்கோ, இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்



















