இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்தும் வெளிநாட்வர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான F.U. வுட்லர் கூறினார்.
கடந்த ஆண்டு இலங்கையில் வாகனங்களை செலுத்தும் போது ஏற்பட்ட வீதி விபத்துகளில் மொத்தம் 05 வெளிநாட்டினர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் 07 கடுமையான விபத்துக்கள் பதிவானதாகவும், 78 சுற்றுலாப் பயணிகள் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளில், வாகன சாரதிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் இருவரும் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் விதிகளை மீறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்தும் வெளிநாட்டினர் மீது வழக்குத் தொடரப்படும்.
அதேநேரம், ஒரு மோட்டார் வாகனம், மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டியை உரிமையாளர் வாடகைக்கு விட வேண்டுமானால் ஒரு வெளிநாட்டு நபர் சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம், இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு வழங்கப்படும் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பித்தவுடன் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றில் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
மேலும், வேரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலும், கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சிறப்பு கருமபீடங்களிலும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கூறினார்.












