மாசி மகத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் 1008 சங்கு பூஜை இன்று காலை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் இன்று காலை வெள்ளி சங்கு உட்பட 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, கும்ப கலசங்களில் நீர் நிரப்பி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதையடுத்து தீபாராதனை நடைபெற்றது.
உச்சி கால பூஜையின் போது, போகர் சித்தரால் செய்யப்பட்ட நவ பாஷாண சிலையான மூலவருக்கு 1008 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசி மகம், சுப முகூர்த்த தினத்தையொட்டி, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்தனர். நாளை (மார்ச் 3) சந்திர கிரகணத்தை முன்னிட்டு, பகல் 1 மணிக்கு அனைத்து சந்நிதிகளும் சாத்தப்படும். அதனால் காலை 10.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7 மணிக்கு ஸம்ப்ரோச்சனை பூஜையை தொடர்ந்து, சாயரட்சை பூஜை நடைபெறும். பின்னர், தங்க ரத புறப்பாடு மற்றும் அர்த்த ஜாம பூஜை உடன் சந்நிதி அடைக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது





















