அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்தால் மத்திய கிழக்கிலிருந்து ஒரு லிட்டர் எண்ணெயையும் அனுப்ப அனுமதிக்க மாட்டோம் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) செவ்வாயன்று (10) கூறியது.
அதேநேரம், முக்கிய எரிசக்தி உற்பத்தி செய்யும் பிராந்தியத்திலிருந்து தெஹ்ரான் ஏற்றுமதியைத் தடுத்தால் அமெரிக்கா ஈரானை மிகவும் கடுமையாகத் தாக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
ஈரானின் பாதுகாப்பு ஸ்தாபனம் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனியின் பின்னால் அணிதிரண்டு வருவதாகவும், மோதலிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று வெளியிட்ட அறிக்கையைத் தெடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
இதனிடையே, ஈரானின் மதகுரு ஆட்சி முறையைத் தூக்கியெறிவதே தனது போர் நோக்கம் என்று இஸ்ரேல் கூறுகிறது.
ஈரானின் ஏவுகணைத் திறன்களையும் அணுசக்தித் திட்டத்தையும் அழிப்பதே வொஷிங்டனின் நோக்கம் என்று அமெரிக்க அதிகாரிகள் முக்கியமாகக் கூறுகின்றனர்.
ஆனால் இணக்கமான ஈரானிய அரசாங்கத்தால் மட்டுமே போர் முடிவுக்கு வர முடியும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
2026 பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் முழுவதும் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதில் இருந்து குறைந்தது 1,332 ஈரானிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று ஈரானின் ஐ.நா. தூதர் தெரிவித்துள்ளார்.
உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கையாளும் ஹார்முஸ் நீரிணை வழியாக ஈரான் கப்பல் போக்குவரத்தைத் தடுக்க முயன்றால், அமெரிக்காவின் தாக்குதல்கள் கடுமையாக அதிகரிக்கக்கூடும் என்று ட்ரம்ப் எச்சரித்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இப்பகுதியை விட்டு எந்த எண்ணெயையும் வெளியேற அனுமதிக்காது என்று கூறியுள்ளது.
போர் ஏற்கனவே ஹார்முஸ் நீரிணையை திறம்பட மூடியுள்ளது, இதனால் கப்பல்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக பயணிக்க முடியாமல் போய்விட்டன, மேலும் சேமிப்பு வசதிகள் நிரம்பும்போது உற்பத்தியாளர்கள் பம்பிங் செய்வதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், திங்கட்கிழமை மொஜ்தபா கமேனியின் நியமனம் போருக்கு விரைவான முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தகர்ப்பதாகத் தோன்றியது.
எண்ணெய் சந்தைகள் உயர்ந்து பங்குச் சந்தைகள் திணறின, பின்னர் ட்ரம்ப் போருக்கு விரைவான முடிவு ஏற்படும் என்றும் ரஷ்ய எரிசக்தி மீதான தடைகள் தளர்த்தப்படும் என்றும் கணித்தபோது விலைகளில் சரிவு ஏற்பட்டது.
அதன்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் விலைகள் திங்களன்று 29% வரை உயர்ந்த பின்னர் செவ்வாய்க்கிழமை 10% க்கும் அதிகமாக சரிந்தன.
2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவே அதிகபட்சமாக இருந்தது.
உலகளாவிய பங்குச் சந்தைகளும் உயர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.















