பிரித்தானியாவின் சஃபோல்க் (Suffolk) பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 28 வயது பெண் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சஃபோல்க் கவுண்டியின் லோவெஸ்டாஃப்ட் (Lowestoft) பகுதியில் உள்ள ‘ஸ்பேரோஸ் நெஸ்ட் கார்டன்ஸ்’ (Sparrow’s Nest Gardens) பூங்காவில் நபர் ஒருவர் அசைவற்ற நிலையில் கிடப்பதாக வெள்ளிக்கிழமை இரவு 10:13 மணியளவில் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரச் சேவைப் பிரிவினர், அங்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதைக் உறுதி செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதே இடத்தில் இருந்த 28 வயது பெண் ஒருவரைக் கொலைச் சந்தேகத்தின் பேரில் சஃபோல்க் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த நபர் மற்றும் கைது செய்யப்பட்ட பெண் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்றும், இது ஒரு திட்டமிட்ட தனிப்பட்ட மோதல் சம்பவமாக இருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று அந்தப் பகுதியில் இருந்த சாட்சிகள் அல்லது வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ‘டேஷ்கேம்’ (Dashcam) காட்சிகளை வைத்திருப்பவர்கள் உடனடியாகத் தங்களுக்குத் தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக (Post-mortem)அனுப்பப்பட்டுள்ளது.
அதன் முடிவிலேயே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அப்பகுதி பொலிஸாரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு மேலதிக சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
















