புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரச் செயல்முறையை மீளாய்வு செய்யும் குழுவின் தலைவர், பேராசிரியர் லூக் வில்லியம் ஹார்டிங் (Professor Luke William Harding) மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

கல்வி மதிப்பீடு மற்றும் மொழி ஆராய்ச்சித் துறையில் சர்வதேசப் புகழ்பெற்ற அறிஞரான பேராசிரியர் ஹார்டிங், 2026 மார்ச் 20 முதல் மார்ச் 25 வரையான காலப்பகுதியில் இலங்கையில் தங்கியிருந்து, முன்மொழியப்பட்டுள்ள புதிய மதிப்பீட்டுச் செயன்முறை பற்றிய மிக முக்கியமான சந்திப்புகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
அதற்கமைய, அவர் டிஜிட்டல் பணிக்குழு, மதிப்பீட்டுக் குழு, இலங்கை பரீட்சைத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) கல்வி ஆலோசனைக் சபை மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு (NEC) ஆகியவற்றின் உறுப்பினர்களுடன் கொள்கை ரீதியான கலந்துரையாடல்கள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். அத்துடன், ஆசிரியர்களின் தொழில்முறை மேம்பாட்டை இலக்காகக் கொண்ட விசேட கலந்துரையாடலிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
6ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள பாட அலகுகள் அடிப்படையிலான (Module-based) கல்வி முறையின் கீழ், சர்வதேசத் தரத்திற்கு அமையத் தயாரிக்கப்பட்ட புதிய மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வகுப்பறைக்குள் முன்னெடுக்கப்படும் மாணவர் செயற்பாடுகளைத் தரமான முறையில் மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்களுக்கு முறையான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும், எனக் குறிப்பிட்டார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் மிக முக்கியமான பகுதி மாணவர் மதிப்பீட்டுச் செயன்முறையே எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஆசிரியரையோ அல்லது மாணவரையோ தேவையற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக்காது, மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை இனங்கண்டு அவர்களின் கல்வி அபிலாஷைகளை அடைந்துகொள்ள இந்தப் புதிய முறைமை பெரிதும் உதவும் எனத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே மற்றும் கல்விச் சீர்திருத்த மதிப்பீட்டுக் குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.













