வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் நபர் ஒருவர், கூர்மையான ஆயுதங்கள், வாள்களுடன் முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லேரியா பொலிஸ் குழுவினர் வல்பொல சந்தியில் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, 10 கிராமிற்கும் அதிகப்படியான ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இவரிடம் போதைப்பொருளுக்கு மேலதிகமாக தராசு ஒன்றும் இருந்தமையால் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதன்போது, குறித்த தராசு மாலபே பகுதியிலுள்ள கடையொன்றில் திருடப்பட்டது என்றும், அதனை விற்பனை செய்யத் தயாராக இருந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவரது வீட்டைச் சோதனை செய்தபோது கூர்மையான ஆயுதங்கள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றை அவர் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தினாரா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சந்தேகநபர் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் போன்றவற்றைத் திருடி, ஹீனட்டியன கும்புரு வீதியில் வசிப்பவர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதோடு, அந்தப் பொருட்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
மேலும், அவிசாவளை வீதியிலுள்ள இரும்பு விற்பனை நிலையமொன்றில் இரும்புப் பொருட்களைத் திருடி விற்றதாகவும், முல்லேரியா – அவிசாவளை வீதியில் 30,000 ரூபா பணத்தைத் திருடியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விசாரணைகளின் அடிப்படையில், ஆறு குற்றச் சம்பவங்களுடன் இவருக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 38 வயதுடைய வல்பொல லலா என்ற சுமித்ர ஆரச்சிகே லலந்த குணவர்தன என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இன்று (24) அளுத்கடை இலக்கம் 08 நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.














