இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரான சங்ராம் பாட்டீல் (Sangram Patil) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டினை மும்பையில் எதிர்கொண்டுள்ளார்.
பல்வேறு குழுக்களிடையே பகைமையைத் தூண்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பாட்டீல், மும்பையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் (FIR), தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தேடுதல் சுற்றறிக்கையையும் (LOC) எதிர்த்து மும்பை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தத் தேடுதல் சுற்றறிக்கையின் காரணமாக அவரால் இங்கிலாந்துக்குப் பயணிக்க முடியவில்லை என்று கூறியதுடன், நடைபெற்று வரும் விசாரணையில் பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
பாஜக தலைவர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் விமர்சனக் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து குடிமகன் சங்ராம் பாட்டீல் தொடர்பில் மும்பை நகர பொலிஸார் கடந்த டிசம்பர் மாதம் முதல் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பாட்டிலின் சட்டத்தரணி ராஜீவ் ஷக்தர், திங்களன்று குறித்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது, தனது கட்சிக்காரருக்கு எதிரான இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், அரசியல் பேச்சு மற்றும் கருத்து வேறுபாடுகளைக் குற்றமாக்கும் காவல்துறையின் முயற்சியின் ஒரு பகுதி என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்திய சட்டத் திட்டத்தின்படி, ஒரு தேடுதல் சுற்றறிக்கையானது விசாரணையில் உள்ள நபர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
















