உக்ரேனின் தலைநகரான கீவ் மீது வியாழக்கிழமை (02) அதிகாலையில் ரஷ்யா நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் டஜன் கணக்கான ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது.
இந்த ஆண்டில் தலைநகர் மீது நடத்தப்பட்ட மிகக் கொடிய தாக்குதலான இதில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், பலர் காயமடைந்ததுடன், சுமார் 130 கட்டிடங்கள் சேதமடைந்தன.
வியாழன் இரவு முழுவதும் தலைநகர் கீவ் நகரின் மையப்பகுதியைத் தொடர் வெடிப்புகள் உலுக்கின.
ஆயிரக்கணக்கான மக்கள் குண்டுத் தடுப்பு அறைகளுக்கும் நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கும் விரைந்து சென்றனர்.
வானம் முழுவதும் அடர்த்தியான புகை மண்டலம் சூழ்ந்திருந்தது.
இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் மூன்று உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளதாக உக்ரேனின் அவசரச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
தலைநகரின் இராணுவ நிர்வாகத் தலைவர் டைமுர் டகாசெங்கோ (Tymur Tkachenko), முன்னதாக 91 பேர் காயமடைந்ததாகத் தெரிவித்திருந்தார்.
இடிபாடுகளில் சிக்கியிருக்கும் குடியிருப்பாளர்களைத் தேடி மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அவர் முன்னரே எச்சரித்திருந்தார்.
தலைநகரின் கிழக்குப் புறநகர்ப் பகுதியில், டினிப்ரோ (Dnipro) ஆற்றின் இடது கரையில் உள்ள ஒரு இடத்தில் மீட்புக் குழுவினர் ஐந்து உடல்களை மீட்டதாகவும், அதேவேளையில் எட்டு குடியிருப்பாளர்களைப் பற்றிய தகவல் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், அனைத்து இடிபாடுகளும் அகற்றப்படும் வரை மீட்புக் குழுவினர் இடைவிடாது பணியாற்றுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் இந்தப் போரில்கூட, தலைநகர் முழுவதும் ஏற்பட்ட அழிவின் அளவும் பரவலும் இதற்கு முன் அரிதாகவே காணப்பட்ட ஒன்றாகும்.
மே மாதத்தில் கீவ் நகரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருபத்து நான்கு பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.














