இந்தோனேசியாவில் சனிக்கிழமை (15) அதிகாலையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த எண்ணிக்கை தற்காலிகமானது என்று எச்சரித்துள்ள அந்த முகமை (BPBD), மேலும் பலர் பல்வேறு அளவிலான காயங்களுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறியுள்ளது.
நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட டஜன் கணக்கான தொடர் அதிர்வுகளால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை 5:00 மணிக்கு சற்று முன்னதாக (வெள்ளிக்கிழமை 22:00 GMT) ஃப்ளோரஸ் (Flores) தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 15 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்தோனேசியாவின் வானிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.
அதே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத் தொடர் அதிர்வுகள் உணரப்பட்டன; அவற்றில் ஒன்று 6.1 ரிக்டர் அளவு கொண்டதாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







