ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மொபைல் மற்றும் டெப்கள் போன்ற திரை பயன்பாடு நேரம் குறித்து இங்கிலாந்து அரசாங்கம் தனது முதல் தேசிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் குறித்த திரையைப் பயன்படுத்தக் கூடாது என்றும், உணவு உண்ணும் நேரங்கள் மற்றும் உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு திரைப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வேகமான வீடியோக்களைத் தவிர்த்து, முடிந்தவரை குழந்தைகள் ஒன்றாகத் திரைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் இந்த வழிகாட்டல்கள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்துகிறது.
இங்கிலாந்தின் குழந்தைகள் விவகார ஆணையர் டேம் ரேச்சல் டி சௌசா (Dame Rachel de Souza) மற்றும் முன்னணி சுகாதார மற்றும் ஆரம்பகாலக் கல்வி நிபுணர்களுடன் இணைந்து இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
டேம் ரேச்சல் டி சௌசா மற்றும் கல்வித் துறையின் அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் ரஸ்ஸல் வைனர் ஆகியோர் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், நீண்ட நேரம் திரைகளில் மட்டுமே செலவிடுவது குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாத தூக்கம் மற்றும் உடல் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர்.
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பல சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டுமா என்பது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் தனியாக ஒரு கலந்தாலோசனையை நடத்தி வரும் வேளையில் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளன.















