அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் (PTA) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, இன்று (22) குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், சுரேஷ் சலேவை மூன்றாவது சந்தேகநபராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) பெயரிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார கடந்த வழக்கு விசாரணையின் போது உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவிற்கு அமையவே அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆரம்பமாகியுள்ளன.
புலனாய்வுத்துறையின் உயர் மட்ட அதிகாரியாக இருந்த சுரேஷ் சலே, இந்தத் தாக்குதல் தொடர்பான சதித்திட்டங்கள் அல்லது தகவல்கள் மறைக்கப்பட்டமை குறித்துத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















