பொல்கஹவெலையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ரயிலின் பெட்டியொன்று தண்டவாளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்ததில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 3:25 மணிக்கு பொல்கஹவெலையிலிருந்து புறப்பட்ட இந்த ரயில், வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே வந்துகொண்டிருந்த போதே திடீரென தடம் புரண்டுள்ளது.
விபத்தின் வீரியம் காரணமாக ரயிலின் ஒரு பெட்டி முற்றாகக் கவிழ்ந்துள்ளது.
ரயில் தடம் புரண்ட போது , அதிலிருந்த பயணி ஒருவர் பெட்டிக்கு வெளியில் தூக்கி வீசப்பட்ட நிலையில்
அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்கும் இடையில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 12 பயணிகளும் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் மிகவும் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து காரணமாகக் கீழ் ரயில் மார்க்கத்திலான (Down Track) போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும், மேல் ரயில் மார்க்கம் (Up Track) மற்றும் மூன்றாவது ரயில் மார்க்கம் ஆகியவற்றினூடாக ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருவதாகச் சம்பவ இடத்தில் இருந்த ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது ரயில்வே திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதோடு, கவிழ்ந்த ரயில் பெட்டியை அகற்றும் பணிகளையும் விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.















