அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் நிலைமைகளுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே பெய்ஜிங்கில் நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தையில் ஈரான் விவகாரத்தில் தனது பொறுமை குறைந்து வருவதாகவும், உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மீண்டும் திறக்க வேண்டும் என்பதில் சீன ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் போர், தைவான் விவகாரம் மற்றும் இருதரப்பு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து பெய்ஜிங்கில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் நடத்திய இரண்டாம் நாள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இன்று (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த டிரம்ப், “மற்றவர்களால் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துள்ளோம்” என்று கூறினார்.
அத்துடன், “ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை நாங்கள் விரும்பவில்லை, அதேநேரம் நீரிணைகள் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்யும் சீன எண்ணெய் நிறுவனங்கள் மீது வொஷிங்டனால் விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவது குறித்துப் பரிசீலித்து வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர பெய்ஜிங் தனது செல்வாக்கைப் பயன்படுத்துமா என்பது குறித்து டிரம்ப்பின் கருத்துக்கள் தெளிவான அறிகுறி எதையும் வெளிப்படுத்தவில்லை.
ஈரான் குறித்த கலந்துரையாடல் பற்றி ஜனாதிபதி ஷி ஜின்பிங் நேரடியாக எதனையும் கூறாத போதிலும், ஈரான் போர் குறித்த பெய்ஜிங்கின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் சீன வெளியுறவு அமைச்சகம் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“இந்த மோதல் ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது, இது தொடர்வதற்கு எந்தக் காரணமும் இல்லை” என்று அந்த அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பெரும்பாலான சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முன்னெப்போதும் இல்லாத கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா கடந்த மாதம் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்திய போதிலும், அந்நாட்டுத் துறைமுகங்கள் மீது முற்றுகையைத் தொடர்கிறது. அமெரிக்கா தனது முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வரும் வரை நீரிணையைத் திறக்கப் போவதில்லை என்று டெஹ்ரான் திட்டவட்டமாகத் அறிவித்துள்ளது. ஆனால், ஈரான் உடன்படிக்கைக்கு வராவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், பேச்சுவார்த்தைகளைத் தொடர வொஷிங்டன் விரும்புவதாகத் தெரிவிக்கும் செய்திகள் தமக்குக் கிடைத்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்று ஈரான் தொடர்ச்சியாக மறுத்து வரும் அதேவேளை, தனது அணுசக்தித் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவோ அல்லது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பைக் கைவிடவோ மறுத்து வருகிறது. இது டிரம்ப்பிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
“நான் இனி பொறுமையாக இருக்கப் போவதில்லை. அவர்கள் உடனடியாக ஒரு உடன்படிக்கைக்கு வர வேண்டும்,” என்று பாக்ஸ் நியூஸ் (Fox News) தொலைக்காட்சியின் “ஹானிட்டி” (Hannity) நிகழ்ச்சியில் ஒளிபரப்பான நேர்காணலில் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

















