இலங்கையின் சீர்திருத்தத் திட்டம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய-பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண சீனிவாசன் கூறியுள்ளார்.
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் மேற்கொள்ளப்படும் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த ஆய்வுகளை அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு பரிசீலிக்க உள்ளது.
இது தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஓர் அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளில் பேரண்டப் பொருளாதார நிலைத்தன்மையை மீட்டெடுப்பதிலும், கையிருப்பை மீண்டும் உருவாக்குவதிலும், நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் இலங்கை அதிகாரிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக சீனிவாசன் தெரிவித்தார்.
இந்த முயற்சிகள் பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் அங்கீகரிக்கப்பட்டு, பொருளாதாரத்தை ஒரு “உறுதியான அடித்தளத்தில்” நிலைநிறுத்த உதவியுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும், கடினமான வெளிப்புறச் சூழலில் பல பொருளாதாரங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் போலவே, அண்மைய உலகளாவிய நிகழ்வுகளும் புதுப்பிக்கப்பட்ட அழுத்தங்களை உருவாக்கியுள்ளன.
இந்த சாவல்களை சமாளிப்பது ஒருபோதும் எளிதானதல்ல, ஆனால் இலங்கையின் கொள்கைக் கட்டமைப்பு இன்று கடந்த காலத்தை விட கணிசமாக வலுவாக உள்ளது.
ஒரு சீரான கொள்கை திசையைப் பேணுவதும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொருளாதாரம் தன்னை சரிசெய்துகொள்ள அனுமதிப்பதும் முன்னேற்றத்தைத் தக்கவைப்பதற்கு அவசியமானவை.
சீர்திருத்தத் திட்டம் முன்னேறிச் செல்லும் நிலையில், இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து நெருங்கிய ஈடுபாட்டை IMF எதிர்நோக்குவதாகவும் சீனிவாசன் மேலும் கூறினார்.













