கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் திறந்து வைக்கப்பட்ட 70 அடி உயரமான கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் (Lionel Messi) உருவச் சிலை, பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
காற்றில் அந்த பிரமாண்ட சிலை ஆடுவதை அப்பகுதி மக்கள் கண்டறிந்ததை அடுத்து, அதிகாரிகள் அச்சிலையைச் சுற்றிக் கயிறுகளைக் கட்டியுள்ளனர்.
உள்ளூர் நிர்வாகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் அந்த ஃபைபர் கிளாஸ் சிலை உறுதியற்ற நிலையில் இருப்பதைக் கண்டறிந்து, அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க தற்காலிக ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
அதேநேரம், சிலையின் கட்டமைப்பில் கடுமையான குறைபாடுகள் மாநில பொதுப்பணித் துறையினர் கண்டறிந்ததைத் தொடர்ந்து அதனை இடிக்கவும் தற்சமயம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் மெஸ்ஸியின் ‘கோட் டூர்’ என அழைக்கப்படும் இந்தியப் பயணம், குழப்பமான தொடக்கமாக அமைந்த வேளையில் இந்தச் சிலை திறக்கப்பட்டது.
கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் மோசமாக நிர்வகிக்கப்பட்ட ஒரு நிகழ்வில் ரசிகர்களைச் சந்திப்பதற்கு முன்பு, அந்த அர்ஜென்டினா சூப்பர் ஸ்டார் காணொளி வாயிலாக சிலையைத் திறந்து வைத்தார்.
அங்கு, அனுமதியற்ற நபர்கள் நிகழ்ச்சிக்குள் அனுமதிக்கப்பட்டதால், கூட்டத்தில் கலவரம் ஏற்பட்டது.
ரசிகர்களுடன் சிறிது நேரம் உரையாடிய பிறகு, மெஸ்ஸியும் அவரது குழுவினரும் அந்த இடத்தை விட்டு முன்கூட்டியே வெளியேறினர்.
பின்னர், ரசிகர்கள் நாற்காலிகளைப் பிடுங்கி மைதானத்தில் வீசினர்.
கொல்கத்தாவில் நடைபெற்ற மெஸ்ஸி நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களிடம், அந்தப் பயணத்தை நிர்வகித்த விதம் குறித்து பின்னர் அதிகாரிகள் விசாரணை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
















