கட்டாரின் ராஸ் லஃபான் (Ras Laffan) பகுதியில் உள்ள திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) செயலாக்க மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 54 பேர் காயமடைந்ததாகவும், மேலும் 18 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்தனர்.
கட்டார் எனர்ஜி (QatarEnergy) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் உள்ள பர்சான் உள்ளூர் எரிவாயு விநியோக நிலையத்தில் செயல்பாடுகள் தொடங்கப்பட்டபோது இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.
அரசுக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனம், இந்தச் சம்பவத்தால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவசரக்கால மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் மேலும் கூறியது.
இந்த வெடிப்புச் சம்பவம் ஒரு “தொழில்நுட்ப விபத்து” காரணமாகவே நிகழ்ந்ததாகக் கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது;
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலான எரிவாயு கசிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் அது வலியுறுத்தியது.
காணாமல் போனதாகக் கூறப்படும் 18 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சிவில் பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து, கட்டார் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் இத்தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சு தெரிவித்தது.














