எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்தத் தவறினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) ‘கறுப்புப் பட்டியலில்’ சேர்க்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளியான செய்தி அறிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்ட அறிக்கையில்,
இந்த அறிக்கை உண்மைத்தன்மை அற்றதுடன், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐசிசி தலைவர் ஜெய ஷா ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்பை வேண்டுமென்றே தவறாகச் சித்தரிக்கிறது.
அந்த கலந்துரையாடலில், இறுதி எச்சரிக்கைகள், கறுப்புப் பட்டியல் அச்சுறுத்தல்கள் அல்லது தேர்தல் கோரிக்கைகள் இடம்பெறவில்லை.
மாறாக கிரிக்கெட் அபிவிருத்தி, அடிமட்ட மற்றும் இளைஞர் திட்டங்கள், மற்றும் இளம் வீரர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவையே விவாதிக்கப்பட்டன என்றும் ஜனாதிபதியும் ஐசிசி தலைவரும் எக்ஸ் தளத்தில் பகிரங்கமாக உறுதிப்படுத்தினர்.
அத்தகைய இறுதி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை – என்றும் சுட்டிக்காட்டியது.
இவ்விவகாரம் குறித்து ஐசிசி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.















