வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் தலைநகர் கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், குறைந்தது 32 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இந்த அனர்த்தத்தில் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) தெரிவித்தார்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, புதன்கிழமை அன்று GMT நேரம் 22:04 மணிக்கு, கராகஸ் நகருக்கு மேற்கே சுமார் 284 கி.மீ (176 மைல்) தொலைவில் உள்ள சான் ஃபெலிப் (San Felipe) அருகே 7.2 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து தலைநகருக்கு மேற்கே சுமார் 293 கி.மீ (182 மைல்) தொலைவில் உள்ள யுமாரே (Yumare) அருகே 7.5 ரிக்டர் அளவுள்ள மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தப் பேரிடனினால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடும் என்று அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய ரோட்ரிக்ஸ், தற்போதைய நிலவரப்படி, 32 பேர் உயிரிழந்ததாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன என்று கூறினார்.
அதேவேளையில், தலைநகருக்கு அருகிலும் நகரின் விமான நிலையம் அமைந்துள்ள பகுதியாகவும் விளங்கும் ‘லா குவைரா’ (La Guaira) – பேரிடரால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதி – குறித்த தரவுகள் இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.













