ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து அழைத்துச் செல்லும் தனது நடவடிக்கைகளை ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு வியாழக்கிழமையன்று (25) தற்காலிகமாக நிறுத்திவைத்தது.
ஒரு கப்பல் தாக்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, ஈரான் தொடர்பான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆரம்பக்கட்ட ஒப்பந்தம் நீடிக்குமா என்பது குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
தாங்கள் அங்கீகரிக்காத வழித்தடங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கப்பல்களுக்கு தெஹ்ரான் எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களுக்குப் பின்னர், ஓமன் அருகே ஒரு சரக்குக் கப்பல் தாக்கப்பட்டதாக பிரிட்டிஷ் கடற்படை அமைப்பான UKMTO கூறியது.
வளைகுடா நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வதற்கான கோரிக்கைகளை நிர்வகிக்க தெஹ்ரான் அமைத்துள்ள ஈரான் அதிகார அமைப்பு, தாங்கள் நிர்ணயித்துள்ள வழித்தடங்களுக்கு வெளியே செல்லும் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படாது என்று கூறியது.
சிங்கப்பூர் கொடியுடன் இயங்கும் ‘எவர் லவ்லி’ (Ever Lovely) என்ற கப்பல்தான் தாக்குதலுக்கு உள்ளானதாக நான்கு தரப்புகள் அடையாளம் கண்டுள்ளன.
அக்கப்பல் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கலாம் என்று பாதுகாப்புத் துறை வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
இது குறித்து அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் வெளியாகவில்லை.
போர் முடிவுக்குக் கொண்டுவரவும், நீரிணையை மீண்டும் திறக்கவும் நோக்கமாகக் கொண்ட ஒப்பந்தத்தை ஈரான் மதிக்காவிட்டால், அந்நாட்டின் மீது மீண்டும் குண்டுவீசும் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
















